கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம் பால் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம் பால் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 9:51 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பால் உற்பத்தியாளர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முகமது அலி கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் பல ஆரம்ப சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. உடனடியாக தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சங்கத்தின் பொதுச்செயலாளர் முகமது அலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஆவின் நிர்வாகம் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. பால் வழங்கக்கூடிய ஆரம்ப சங்கங்களுக்கு சுமார் ரூ.300 கோடி வரை ஆவின் நிர்வாகம் பாக்கி தொகை வைத்துள்ளது. பால் கொள்முதல் செய்வதை ஆவின் நிர்வாகம் அதிகப்படுத்த வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக 30 லட்சம் லிட்டர் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

அரியானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியாவதில் 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆவின் நிர்வாகம் வியாபாரத்தை விரிவுபடுத்தாமல், இருக்கின்ற வியாபாரத்தை சுருங்க வழிவகை செய்கின்றது. ஆவின் நிர்வாகத்தில் கடந்த ஓராண்டாக கூடுதலாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எதிர்காலத்தில் இது தொடர்ந்தால் நிச்சயமாக ஆவின் நிர்வாகம் பல மாவட்ட ஒன்றியங்களில் திவால் ஆகும் சூழ்நிலை ஏற்படும். இதனால் சுமார் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதில் இணைந்து இருக்கக்கூடிய 10 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆர்ப்பாட்டம்

வருகிற மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் போது பால் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, எங்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பாலின் விற்பனை விலையை உயர்த்தி உள்ளன. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியது சரியில்லை. நியாயமில்லை. பால் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story