அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு: ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்
அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கில் ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊட்டி,
கேரள மாநிலம் அகழி என்ற இடத்தில் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணா என்பவரை கேரள போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படியும் கொலக்கொம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, வாரண்டு பெறப்பட்டு கேரள போலீசாருக்கு அனுப்பப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் டேனிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கோர்ட்டில் 2 முறை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. திருச்சூர் சிறையில் இருந்து டேனிசை கேரள போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி எந்தி பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வந்து மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது டேனிஸ் தனக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை இருப்பதால் அடிக்கடி திருச்சூர் சிறையில் இருந்து அழைத்து வராமல், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிபதியிடம் கூறினார்.
அதனை தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். டேனிஸ் கோர்ட்டுக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கேரள போலீசார் திருச்சூர் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story