ஏல தொகை நிலுவையால், குன்னூர் நகராட்சி வாகன நிறுத்துமிடத்துக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
ஏல தொகை நிலுவையால் குன்னூர் நகராட்சி வாகன நிறுத்தும் இடத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய அவலம் இருந்தது. இதன் காரணமாக குறிப்பாக மவுண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாகனங்களுக்கும் நெரிசலில் சிக்கி தவித்து வந்தன.
இதனை தொடர்ந்து வி.பி.தெரு ஓடையின் மேல் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் அமைக்க கடந்த 2006-2007-ம் ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் வி.பி.தெரு ஓடையின் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. பின்னர் வாகன நிறுத்தும் இடம் 2014-ம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில்2017-ம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார்.
இதன்படி 2017-ம் ஆண்டிற்கு ரூ.10 லட்சத்து 10 ஆயிரமும், 2018-ம் ஆண்டிற்கு ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 500-மும், 2019-ம் ஆண்டிற்கு ரூ.11 லட்சத்து 13 ஆயிரத்து 525-மும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு தொழில் வரியாக ரூ.7 ஆயிரத்து 350-மும், சேவை வரியாக ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 675-மும் என மொத்தம் ரூ.37 லட்சத்து 19 ஆயிரத்து 50 செலுத்த வேண்டியது இருந்தது.
இதில் 19 லட்ச ரூபாய் பாக்கி தொகை இருந்தது. இந்த நிலுவை தொகை செலுத்தும் காலக்கெடு நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதனால் நகராட்சி அதிகாரிகள் வாகன நிறுத்தும் இடத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story