நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றலை வெளிக்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் - கலெக்டர் பேச்சு


நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றலை வெளிக்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:45 PM GMT (Updated: 23 Jan 2020 6:48 PM GMT)

நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றலை வெளிக்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பெண்கள் சாதனை கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கண்காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, அறிவியல், தற்காப்புக்கலை உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, பள்ளி மாணவிகளின் விருதுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கண்காட்சி அரங்க மேடையில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், பேச்சு, பாடல், திருக்குறள் ஒப்பித்தல் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திருவண்ணாமலையை சேர்ந்த 2½ வயது குழந்தை லக்சனா தனது தாயார் கேட்ட திருக்குறள், தலைவர்கள் பெயர், திருப்பாவை, ஸ்லோகன் ஆகியவற்றினை கலெக்டர் முன்னிலையில் எடுத்துரைத்தது அனைவரையும் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட அளவில் பெண்களின் சாதனைகள் காட்சிபடுத்துவதற்கு வாய்ப்பு தருவதற்கு இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக கடந்து ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பல்வேறு சாதனைகள் வீட்டில் முடங்கி கிடப்பதை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வாழ்க்கையில் படிப்பு மட்டும் தான் சாதனை கிடையாது, பல்வேறு தனித்திறன்கள் கொண்ட பெண்களுக்கு படிப்புடன் அவர்களின் திறமைகளும் சாதனை தான். இன்றைய காலத்தில் அரசு நிர்வாகம், தனியார் துறை, அரசியல், உள்ளாட்சி நிர்வாகம் என அனைத்திலும் பெண்கள் வழிநடத்தும் நிலை உருவாகி உள்ளது.

வாழ்க்கையில் க‌‌ஷ்டப்பட்டால் அனைத்து சாதனைகளையும் நிகழ்த்தலாம். நம் எண்ணங்களை வெளியில் கொண்டு வரவேண்டும். தினமும் காலையில் எழுந்து இன்று என்ன செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் உங்கள் லட்சியத்தை அடையலாம். வாழ்க்கையில் ஏற்படும் தடைகற்களை உடைத்து சாதிக்க வேண்டும். வாய்ப்புகளை இழந்துவிட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. வாய்ப்புகள் வரும் போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் திறமை, ஆற்றல் வெளிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். மற்றவர்கள் வாழ்க்கையுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஒவ்வொரு வி‌‌ஷயத்தையும் உள்வாங்கி விரும்பி, விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமாசித்ரா, உதவி கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, அரசு அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story