எருது விடும் விழாவில் மாடு கிணற்றில் விழுந்து பலி: விழா குழுவை சேர்ந்த 3 பேர் கைது - பொது மக்கள் சாலைமறியல்


எருது விடும் விழாவில் மாடு கிணற்றில் விழுந்து பலி: விழா குழுவை சேர்ந்த 3 பேர் கைது - பொது மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவின் போது மாடு கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. இதனையடுத்து விழா குழுவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் மயிலார் திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு ஓடின. இதில் சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான மாடு விழா நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

இதனையடுத்து வாணியம்பாடி தாலுகா போலீசார், மாடு உயிரிழப்புக்கு விழாக்குழுவினர் தான் காரணம் என கூறி விழா நடத்திய ஊர் கவுண்டர் பூபாலன், ஊர் நாட்டாண்மை எம்.சங்கர், ஆர்.பழனி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மாட்டின் உரிமையாளரான ராமன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள கொத்தக்கோட்டை என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிரு‌‌ஷ்ணன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story