தலைவர்களின் கருத்துகள், கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் கருத்துகள், கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்,
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சாரண-சாரணியர் இயக்க மாணவ-மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாரண-சாரணிய இயக்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தில் சேரும் மாணவர்கள் ஒழுக்கம், கண்ணியம், கட்டுபாடு ஆகிய குணங்களை கடைப்பிடிக்க வேண்டும். கடவுள் பக்தி, நாட்டுப்பற்று, தொண்டு செய்யும் மனப்பான்மை போன்ற உயர்ந்த பண்புகளை வளர்த்து நாட்டுக்கு நல்ல தொண்டு புரியும் இயக்கமே சாரண இயக்கமாகும். இந்த இயக்கத்தில் மாணவ-மாணவிகள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதோடு நின்று விடாமல் நூலகங்களுக்கு சென்று சுபாஷ் சந்திரபோஸ், பகவத்சிங், அம்பேத்கர், பெரியார், காமராஜர், காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் நூல்களை படிக்க வேண்டும். மேலும் அந்த நூல்களில் உள்ள கருத்துக்களையும், கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும். மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கண்கள் போன்றது. ஆகவே அதை மறக்க கூடாது. மாணவர்கள் நல்ல கல்வி, அறிவை பெற்று வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 102 பள்ளிகளை சேர்ந்த 770 சாரண-சாரணிய இயக்க மாணவ-மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கி பாராட்டினர்.
சாரண-சாரணிய இயக்கத்தில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு 36 மாதங்கள் 4 படி நிலைகளில் முதலுதவி, தேசப்பற்று, நீச்சல், திசையறிதல், கூடாரம் அமைத்தல், ஐம்புலன் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது தமிழக கவர்னரால் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 770 மாணவர்களுக்கு கவர்னர் வழங்கிய விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இதில், சாரண-சாரணிய மாநில முதன்மை கமிஷனர், மாநிலத்தலைவர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story