விழுப்புரம் அருகே, பள்ளி வேன் மோதி பெண் குழந்தை சாவு
விழுப்புரம் அருகே பள்ளி வேன் மோதி பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த குமளம் அருகே உள்ள சீனிவாசபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுதாகர். இவருடைய மனைவி தங்கம். இவர்களது மூத்த மகள் வினோதினி (வயது 6) விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வினோதினியை பள்ளிக்கு அழைத்துச்செல்வதற்காக பள்ளி வேன், சுதாகர் வீட்டின் அருகில் வந்து நின்றது. அந்த வேனில் வினோதினியை அவளது பெற்றோர் ஏற்றினர். அந்த சமயத்தில் சுதாகரின் இளைய மகளான ஒரு வயதுடைய கிருத்திக்ஷா, வேன் டிரைவரின் இருக்கை ஓரமாக கீழே நின்று கொண்டிருந்தாள்.
வேனில் வினோதினி ஏறியதும் அதன் டிரைவரான விழுப்புரம் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பட்டாபிராமன் (47) என்பவர் குழந்தை நிற்பதை கவனிக்காமல் கவனக்குறைவாக வேனை வலதுபுறமாக திருப்பினார்.இதில் வேன் மோதியதில் குழந்தை கிருத்திக்ஷா பலத்த காயமடைந்தது. உடனே குழந்தையை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை கிருத்திக்ஷா பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பட்டாபிராமனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story