கருமந்துறை அருகே, குடிபோதையில் கிணற்றில் தவறிவிழுந்து 2 விவசாயிகள் பலி


கருமந்துறை அருகே, குடிபோதையில் கிணற்றில் தவறிவிழுந்து 2 விவசாயிகள் பலி
x
தினத்தந்தி 24 Jan 2020 4:45 AM IST (Updated: 24 Jan 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

கருமந்துறை அருகே குடிபோதையில் கிணற்றில் தவறிவிழுந்து 2 விவசாயிகள் பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

பெத்தநாயக்கன்பாளையம், 

சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள பெரிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன்(50). விவசாயிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு மாரியின் விவசாய தோட்டத்தில் நண்பர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் இருவரும் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக்கொண்டு தோட்டத்தின் வழியாக நடந்து வந்துள்ளனர்.

இதில் அவர்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்புச்சுவர் இல்லாத மொட்டை கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

இதனிடையே நண்பர்கள் இருவரையும் காணவில்லை என்று உறவினர்கள் தேடிய போது, அவர்கள் இருவரும் கிணற்றில் பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கிணற்றில் இருந்து மீட்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு கருமந்துறை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அங்கிருந்த கிராம மக்கள், ‘நண்பர்கள் இருவரும் இயற்கை மரணம் தான் அடைந்துள்ளனர், எங்களுக்கு அவர்கள் சாவில் எந்தஒரு சந்தேகமும் இல்லை’ என்று கூறி பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இயற்கை மரணம் என்றாலும், கிணற்றில் தவறிவிழுந்து உள்ளதால், அது விபத்தாக கருதி இறந்தவர்களின் உடல்களை கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை போலீசார் கிராம மக்களிடம் விளக்கினர். பேச்சுவார்த்தை முடிவில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் விவசாயிகள் 2 பேர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் கருமந்துறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story