கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்


கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2020 4:15 AM IST (Updated: 24 Jan 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி,

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக 14 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. இதேபோல, திருச்சி மாவட்ட பஞ்சாயத்திலும் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 18 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதனையொட்டி மாவட்ட பஞ்சாயத்தையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

கலெக்டரிடம் கோரிக்கை

மாவட்ட ஊராட்சி தலைவர் டி.ராஜேந்திரன் மற்றும் 17 வார்டு தி.மு.க. கவுன்சிலர்கள், 14 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணை தலைவர்கள் ஒன்று சேர்ந்து நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் எஸ்.சிவராசுவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

பின்னர் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் சாலை, குடிநீர், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கட்சி பாகுபாடு இன்றி அனைத்து மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.


Next Story