மலையில் இருந்து தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் சாவு - சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
மலையில் இருந்து தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் பஜனை கோவிலை சேர்ந்தவர் தேவசக்திவேல் (வயது 45). இவர் கும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான வேல்முருகன், முனுசாமி, குமரேசன், சுப்பிரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே உள்ள ராமகிரி மலைப்பகுதிக்கு காரில் சென்றார். பின்னர், சர்க்கரை நோயை குணமாக்கும் மூலிகைச்செடி பறிக்க முயன்றபோது மலைப்பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவரது உடலை நேற்றுமுன்தினம் இரவு வெள்ளியூர் கிராமத்திற்கு நண்பர்கள் காரில் எடுத்து வந்தனர். மலைப்பகுதியில் இருந்து கீழே விழுந்ததில் தேவசக்திவேல் இறந்ததாக கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், நண்பர்களே அவரை அடித்து கொன்று விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில்தான் நீங்கள் முறையிட வேண்டும். இந்த பகுதியில் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறினர்.
இதையடுத்து தேவசக்திவேலின் உறவினர்கள் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் போலீஸ் நிலையத்தின் எதிரே அவரது உடலை வைத்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நாகலாபுரம் போலீசார் தேவசக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது நண்பர்கள் 5 பேரிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story