சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 9:24 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் உள்ள பார்சல் அலுவலகம் அருகில் நேற்று காலை வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர், தண்டவாளத்தின் அருகில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தின் மேல் ஏறினார்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை கீழே இறங்கும்படி அவர்கள் கூறினர். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த வாலிபர், உயர் அழுத்த கம்பி செல்லும் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

இதுபற்றி சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உயர் அழுத்த மின்கம்பிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த கொண்டித்தோப்பு தீயணைப்புத்துறையினர் மின்கம்பத்தில் ஏறி அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மைனாதுனி(வயது 30) என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபரை தண்டையார்பேட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நேற்று காலை சுமார் 1 மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story