பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது 2 மான்கள் உயிருடன் மீட்பு


பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது 2 மான்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:30 PM GMT (Updated: 23 Jan 2020 10:25 PM GMT)

பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது. 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

பர்கூர்,

பர்கூர் அருகே உள்ள ஜெயின் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 60). விவசாயி. இவரது நிலத்தில் 65 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில் தற்போது 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. இவரது நிலமும், வீடும் அருகருகில் அமைந்துள்ளன. இந்த நிலத்தின் அருகில் பூமலை காடு உள்ளது.

மேலும், நேரலகோட்டை காப்பு காடு மற்றும் ஒப்பதவாடி வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் தேடி பூமலை காட்டில் இருந்து 3 புள்ளிமான்கள் விவசாய நிலத்திற்கு வந்தன.

புள்ளிமான் செத்தது

அப்போது அந்த பகுதியில் இருந்த தெருநாய்கள் மான்களை துரத்தின. இதனால் மான்கள் வழி தெரியாமல் தேவேந்திரனின் கிணற்றில் தவறி விழுந்தன. நேற்று காலை தேவேந்திரன் தனது விவசாய நிலம் பக்கமாக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தண்ணீரில் இருந்து ஏதோ தத்தளிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர் கிணற்றை எட்டி பார்த்தார். அங்கு 3 மான்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சற்குணன், அன்பு, ராஜ்குமார், பிரதாப், விவேகானந்தன் உள்ளிட்டோர் அங்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி வலை போட்டு மான்களை கயிறு கட்டி மீட்டனர். அதில் 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன. ஒரு குட்டி புள்ளிமான் செத்து விட்டது.

விவசாயிகள் கோரிக்கை

இதையடுத்து மீட்கப்பட்ட 2 மான்களையும் வனத்துறையினர் காப்பு காட்டில் விட்டனர். மேலும் இறந்து போன மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், மான்கள் அடிக்கடி தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன.எனவே வனப்பகுதியில் இருந்து மான்கள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story