போலி ஆவணம் மூலம் வாகனங்களுக்கு காப்பீடு செய்த சென்னை வாலிபர் கைது


போலி ஆவணம் மூலம் வாகனங்களுக்கு காப்பீடு செய்த சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் மூலம் வாகனங்களுக்கு காப்பீடு செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மோட்டார் சைக்கிளை அவரது நண்பர் ஒருவரிடம் கொடுத்திருந்தார். அவர் சேலம் மணல்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளுக்கு, காப்பீடு செய்யவில்லை. இதனால் சேலத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் காப்பீடு பிரிவில் அப்போது வேலை பார்த்த சென்னையை சேர்ந்த பிரேம் பிரகா‌‌ஷ் (வயது 30) என்பவரை தொடர்பு கொண்டு வாகனத்துக்கு காப்பீடு செய்து கொடுக்கும் படி கேட்டு உள்ளார். இதையொட்டி பிரேம் பிரகா‌‌ஷ் காப்பீடு செய்ததற்கான ஒரு நகலை சுப்பிரமணியனுக்கு வழங்கி உள்ளார். நகலை பெற்றுக்கொண்ட சுப்பிரமணியன் விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு ந‌‌ஷ்ட ஈடு வழங்குமாறு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் காப்பீடு வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட எச்.டி.எப்.சி. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி, எங்கள் வங்கி சார்பில் காப்பீடு செய்யவில்லை. அதற்கான எந்த ஆவணமும் வழங்கவில்லை. மேலும் எங்களது வங்கி பெயரில் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே போலி ஆவணம் தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி சார்பில் சேலம் மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையொட்டி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாகனங்களுக்கு காப்பீடு செய்ய போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையொட்டி போலி ஆவணம் மூலம் வாகனங்களுக்கு காப்பீடு செய்த பிரேம் பிரகாசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சேலத்துக்கு வந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story