கொடைக்கானலில் பரபரப்பு: கற்களால் தாக்கி ஓட்டல் ஊழியர் படுகொலை - வாலிபர் கைது
கொடைக்கானலில் கற்களால் தாக்கி ஓட்டல் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நேதாஜி நகரை சேர்ந்தவர் விசுவலிங்கம் என்ற அனில்குமார் (வயது 50). இவர், கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் காரணமாக இவர், கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு அபிஷேக் (17), அபிலாஷ் (15) என்ற மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பகலில் வீட்டில் இருந்து அனில்குமார் ஸ்கூட்டரில் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை கொடைக்கானல் பஸ்நிலையம் அருகே, தலையில் கற்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அனில்குமார் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் ஸ்கூட்டரின் மையப்பகுதியில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து பஸ்நிலையம், 7 ரோடு சந்திப்பு வழியாக கோக்கர்ஸ் வால்க் பகுதி வரை மோப்பநாய் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர் ராஜேஷ், அங்கு வந்து பதிவான தடயங்களை சேகரித்தார். பின்னர் அனில்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அணைத்து வைக்கப்பட்டதால், அதன்பிறகு கடை அருகே நடந்த காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த மதுபான கடையில் அனில்குமாருடன் சேர்ந்து மது அருந்தியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த ஆரிப் ஜான் (35) என்பவரும், அனில்குமாரும் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து கோக்கர்ஸ் வால்க் பகுதியில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அனில்குமாரை கொலை செய்ததை ஆரிப் ஜான் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த சில தினங்களாக அனில்குமாருடன் சேர்ந்து மது அருந்தி வந்தேன். நேற்று முன்தினம் இரவு மதுபானம் வாங்க பணம் இல்லை. இதனால் தெரிந்த நபர் ஒருவரிடம் பணம் வாங்கி 2 பேரும் மது அருந்தினோம். அதன்பிறகு நாங்கள் வெளியே வந்து விட்டோம். அப்போது, யார் மூலம் மதுபானம் வாங்க பணம் கிடைத்தது என்பது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கீழே தள்ளி விட்டேன். பின்னர் அவருடைய தலையில் கற்களால் தாக்கி கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story