தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல் - 43 பேர் கைது; போலீஸ் குவிப்பு
தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு கருப்பு கொடி காட்டிய முஸ்லிம்கள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் பார்க் திடலில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் தேனி எம்.பி.யும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பங்கேற்பதாக இருந்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. வாக்களித்ததை கண்டித்தும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு கொடி காட்டவும் திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கம்பம் தபால்நிலையம், போக்குவரத்து சிக்னல், பார்க் திடல் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி. தனது காரில் வந்தார். அவர் காருக்கு பின்னால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் கார்கள் வந்தன.
அப்போது திடீரென முஸ்லிம்கள் சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து எம்.பி.யின் காரை முற்றுகையிட்டனர். மேலும் எம்.பி.யை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் எம்.பி. காரில் இருந்து இறங்காமல் உள்ளேயே அமர்ந்து இருந்தார்.
அப்போது திடீரென சிலர் அவரது காரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த காருக்கு பின்னால் நின்ற பா.ஜ.க நிர்வாகி ஒருவரின் காரையும் சிலர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து முஸ்லிம்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முஸ்லிம்கள் 43 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கம்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே பலத்த பாதுகாப்புடன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசினார். இந்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக பெரியகுளத்தில் உள்ள ரவீந்திரநாத்குமார் எம்.பி.யின் வீடு மற்றும் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story