எம்.பி.க்கள் குழுவுக்கு மரியாதை இல்லை: தாழ்த்தப்பட்ட மக்களை புதுவை அரசு அவமதித்துள்ளது - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
எம்.பி.க்கள் குழுவுக்கு மரியாதை அளிக்காததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை புதுச்சேரி அரசு அவமதித்துள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார். புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
தி.மு.க. கூட்டணியோடு புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசானது தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியதை செய்வதில்லை. பட்ஜெட்டில் குறைந்த அளவில் ஒதுக்கப்படும் நிதியும் முழுமையாக செலவிடப்படாமல் வேறு திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகூட காலத்தோடு எந்த திட்டத்திற்கும் செலவு செய்யப்படுவதில்லை. வீடுகட்ட மானியம் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காலத்தோடு மானியம் வழங்கப்படுவதில்லை. பாட்கோ மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பல இடங்களில் சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு கூட நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இந்தநிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலன்குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட 11 எம்.பி.க்கள் கொண்ட உயர்மட்ட குழு புதுவையில் ஆய்வுசெய்ய வந்திருந்தது.
இந்த குழு புதுச்சேரிக்கு வருவதை 15 தினங்களுக்கு முன்பே தெரிவித்தும் கூட்டத்தை சரிவர ஏற்பாடு செய்யாமல் குழுவின் மதிப்பையும், மாண்பையும் அரசு சீர்குலைத்துவிட்டது. உயர்மட்ட குழு கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்தாமல் தனியார் ஓட்டலில் நடத்தியது தவறான ஒன்றாகும்.
புதுவையில் உள்ள எந்த எம்.எல்.ஏ.வுக்கும், குறிப்பாக ஆதிதிராவிட எம்.எல்.ஏ.க்களுக்கும்கூட இந்த குழுவின் வருகையை தெரிவிக்காததால் மரியாதை நிமித்தமாக எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கக்கூட செல்ல முடியாத நிலையை அரசு உருவாக்கியது. அரசின் தாழ்த்தப்பட்டோர் விரோதப்போக்கு வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ? என்று பயந்த காங்கிரஸ் அரசுபுதுச்சேரி மாநிலத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட உயர்மட்ட குழுவை புதுச்சேரி அரசு அவமதித்ததன் மூலம் புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் காங்கிரஸ் அரசு அவமதித்துள்ளது. இது அரசின் சரியான நடவடிக்கை அல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Related Tags :
Next Story