டயர் வெடித்ததால் திம்பம் மலைப்பாதையில் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
டயர் வெடித்ததால் திம்பம் மலைப்பாதையில் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி,
சத்திமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை இருப்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாக மாறிவிட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் இருந்து கோைவ மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மரம் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. காலை 6 மணி அளவில் திம்பம் மலைப்பாதயின் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது லாரியின் பின்புறத்தில் உள்ள 2 டயர்களும் வெடித்தன.
இதன்காரணமாக லாரியை அதன் டிரைவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து புதிதாக 2 டயர்கள் கொண்டுவரப்பட்டு லாரியில் 9 மணி அளவில் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பஸ்களில் வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story