தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2020 10:45 PM GMT (Updated: 24 Jan 2020 1:59 PM GMT)

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி, 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கி பேசியதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவது அவசியமாகும். இந்த அடையாள அட்டையை ஆதாரமாக கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

இதனால் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிடாத மாற்றுத்திறனாளிகளுக்கு யு.டி.ஐ.டி. எனப்படும் அட்டை பெற்றிட தங்கள் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அங்கன்வாடி மையம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 31–ந்தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெறு உள்ளது.

இம்முகாம்களில் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்–1, ஆதார் அட்டையின் 2 பக்கங்களின் நகல், தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகலுடன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட மையத்திற்கு சென்று உரிய விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உடனே வழங்க வேண்டும். மேலும் மையத்திற்கு வந்து விண்ணப்பம் சமர்ப்பிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பெற்றோர், உறவினர் மூலமாகவும், உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட விவரங்கள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு தனித்துவம் வாய்ந்த அட்டை தங்களுக்கு பின்னர் வழங்கப்படும். எனவே தனித்துவ அட்டை பெற்றிடாத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் சப்–கலெக்டர்கள் சிபிஆதித்யா செந்தில்குமார் (ஸ்ரீரங்கம்), பத்மஜா(முசிறி), ஆர்.டி.ஓ.க்கள் அன்பழகன், ராமன், மகளிர் திட்ட அதிகாரி சரவணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story