தென்காசியில் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


தென்காசியில் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 7:48 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி, 

செங்கோட்டை அருகே உள்ள புளியரை படிக்கல் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் கணேசன் (வயது 32). ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இங்குதான் அவர் கேட் கீப்பராக வேலை பார்த்து வந்தார். 2 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக சந்திரன் என்பவர் அங்கு வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வங்கியில் சென்று கடன் தொகை பெற்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் ரெயில்வே கேட் பகுதியில் கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.

தனது இருசக்கர வாகனத்தை ரெயில்வே கேட் அருகில் நிறுத்தி விட்டு சிறிது தூரம் சென்று அந்த வாகனத்தின் சாவியையும், மொபைல் போனையும் வெளியே வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்துள்ளார். வங்கியில் பணம் கிடைக்கவில்லையா? அதில் ஏதும் பிரச்சினை இருந்ததா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணேசனுக்கு அனுப்பிரியா (25), என்ற மனைவியும் ஹன்சிகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.

Next Story