வனப்பகுதியில் தீயை அணைக்க தீயணைப்பு துறையில் சிறப்பு அதிரடிப்படை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்


வனப்பகுதியில் தீயை அணைக்க தீயணைப்பு துறையில் சிறப்பு அதிரடிப்படை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2020 11:00 PM GMT (Updated: 24 Jan 2020 4:49 PM GMT)

வனப்பகுதியில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கோவை,

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவை வந்தார். அவர் கோவையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு பணி வாகனங்களை பார்வையிட்டார்.

மேலும் அவர், தீயணைப்பு துறைக்கு வழங்கப்பட்டு உள்ள அதிநவீன கருவிகள், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பயன்படுத்தும் கருவிகள், மரங்களை அறுக்க பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அதன் செயல்பாடு குறித்து தீயணைப்பு படை வீரர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 331 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஊட்டி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் மீட்பு பணி நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 600 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. அதை தீயணைப்பு படை வீரர்கள் அணைத்தனர்.

அதுபோன்று 26 ஆயிரத்து 800 மீட்புபணி தொடர்பான அழைப்புகள் வந்து உள்ளன. இதில் நீர்நிலைகளில் சிக்கித்தவித்த 250 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் காப்பாற்றினர். கிணறு மற்றும் நீர்நிலைகளில் சிக்கிய 1200 கால்நடைகள் மீட்கப்பட்டன.

அகில இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 46 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர். தீயணைப்பு படை வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இலையுதிர் காலத்தில் மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து வனப்பகுதியில் கீழே விழும். அந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள் எளிதில் தீப்பிடித்து விடும்.

எனவே வனப்பகுதியில் ஏற்படும் தீயை அணைக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தீயணைப்பு படைவீரர்கள் 20 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு வனப்பகுதியில் ஏற்படும் தீயை எப்படி அணைப்பது, தீயை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே வனப்பகுதியில் ஏற்படும் தீயை அணைக்க தமிழகம் முழுவதும் 700 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு படையை சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள் அணைத்து உள்ளனர்.

மேலும் பாம்பு பிடிப்பது, வீடுகளில் ஏற்படும் தீயை அணைக்கவும் தமிழகம் முழுவதும் 3,600 முகாம்கள் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி தேவைப்பட்டால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு அதிகாரியை அணுகலாம்.

முன்னதாக தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏற்றுக்கொண்டார்.

Next Story