சூலூரில் பரபரப்பு: பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர், காதலியுடன் போலீசில் தஞ்சம்


சூலூரில் பரபரப்பு: பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர், காதலியுடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 25 Jan 2020 5:00 AM IST (Updated: 24 Jan 2020 10:33 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் காதலியுடன் சூலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

சூலூர், 

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராம் (வயது 26). இவர் பி.ஏ. பி.எல். படித்துவிட்டு வக்கீல் பயிற்சி பெற்று வருகிறார். இவர், பெண் ணாக பிறந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஆவார்.

இந்தநிலையில் ராமுக்கும், அவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக காதலித்து வந்தனர். இதற்கு சரஸ்வதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ராமும், சரஸ்வதியும் வீட்டை விட்டு வெளியேறி கோவையை அடுத்த சூலூர் வந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சில திருநம்பிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட னர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சூலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வருவதும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதற்கிடையே சரஸ்வதியின் தாய், தனது மகளை காணவில்லை என்று வில்லிவாக்கம் போலீசில் புகார் கொடுத்தது தெரிந்தது. எனவே ராம் மற்றும் சரஸ்வதி ஆகியோரை சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சூலூர் போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து காதல் ஜோடி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் காதலியுடன் சூலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story