நெல்லை தாழையூத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
நெல்லை தாழையூத்தில் 4 வழிச்சாலையில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லையில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் தாழையூத்து பகுதி அமைந்துள்ளது. இங்கு சிமெண்டு ஆலை மற்றும் ரெயில்வே தண்டவாளம் ஆகிய பகுதிகளில் 2 மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. இவற்றுக்கு நடுவே உள்ள ரோட்டில் பொது மக்கள் பஸ் ஏறுவதற்காகவும், கடை வீதிக்கு செல்லவும் கடந்து செல்வார்கள். இதில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி, சுரங்க பாதை அமைக்க முடிவு செய்தது. கடந்த வாரம் ரோட்டில் இருபுறமும் போக்குவரத்தை திருப்பி விட்டு, நடுவே பொக்லைன் மூலம் குழிதோண்டும் பணியை தொடங்கினார்கள்.
இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுரங்க பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று தாழையூத்து வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சுரங்க பாதை அமைப்பதற்காக ரோட்டின் நடுவே தோண்டப்பட்டுள்ள பகுதிக்கு வந்தனர். அங்கு நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சுரங்க பாதை அமைப்பதால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். பல்வேறு புதிய பிரச்சினைகளும் ஏற்படும். எனவே சுரங்க பாதை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மாறாக ஏற்கனவே உள்ள 2 மேம்பாலங்களையும் இணைக்கும் வகையில், பொது மக்கள் கீழே நடந்து செல்லும் வகையில் தூண்கள் அமைத்து உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்” என்று கூறினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story