அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறுமா? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறுமா? என்பதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறும் சிந்தனையில் இல்லை. ஆனால் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுமா? என்பது தெரியாது. நான் தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சிலர் கூறுகின்றனர். நான் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்ததாக, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே இருமுறை கூறி இருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றது. தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் அதனைவிட கூடுதலான இடங்களில் வென்றுள்ளோம். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனது சொந்த பலத்தில்தான் போட்டியிட முயலும். தற்போது பா.ஜனதா பலமாக உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது.
துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தவறாக பேசவில்லை. அவர் மீது எந்த தவறும் இல்லை. ரஜினிகாந்தை சுற்றித்தான் அரசியல் செய்ய முடியும் என்று பல இயக்கங்கள் ஆளாகி உள்ளன. ரஜினிகாந்தை பொய்யான தலைவராக சித்தரிக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்தனர்.
தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. 21 மாநிலங்களில்தான் பா.ஜனதாவின் உட்கட்சி தேர்தல் நடந்துள்ளது. விரைவில் தமிழகத்துக்கு பா.ஜனதா தலைவர் நியமிக்கப்படுவார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சட்டசபையில் தி.மு.க. ஏன் கேள்வி எழுப்பவில்லை?. கன்னியாகுமரியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் வில்சன் கொலை செய்யப்பட்டதை தவிர்த்து, மற்ற அனைத்து விஷயங்களையும் பேசுகின்றனர். இதற்கு காரணம் வில்சனை கொலை செய்தவர்கள், அவர்களுடைய கூட்டணிக்கு சொந்தமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், நகர தலைவர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story