ஜன்னல் கம்பியை அறுத்து வீடு புகுந்து 22 பவுன் நகை திருட்டு
திருவேற்காட்டில் ஜன்னல் கம்பியை அறுத்து அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு மாதிராவேடு, ஒத்தவாடைதெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 43). இவருடைய மனைவி மைதிலி. கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவில் இருவரும் வீட்டுக்கு திரும்பிவந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கதவில் உள்ள இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
22 பவுன் நகை திருட்டு
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து, அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் டீச்சர்ஸ் காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (61). இவர், சென்னை எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி பத்மாவதி (58).
கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் சென்னை மயிலாப்பூரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றுவிட்டனர். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story