நெல்லை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.80 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது. தற்போது அணைகளில் நீர் இருப்பு 80 சதவீதம் உள்ளது. நடப்பு ஆண்டு இதுவரை நெல் 38,145 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 176 ஹெக் டேர் பரப்பளவிலும், பயறு வகை பயிர்கள் 1,339 ஹெக் டேர் பரப்பிலும், 342 ஹெக்டேரில் பருத்தி, 31 ஹெக்டேரில் கரும்பு, 41 ஹெக்டேரில் எண்ணெய் வித்து என மொத்தம் 40 ஆயிரத்து 74 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஒருவர் நெல் பயிரில் பூச்சி தாக்குதலுக்கு எந்தெந்த மருந்து தெளிக்க வேண்டும் என கூறினார். அப்போது விவசாயி ஒருவர், பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெல் பயிரை கொண்டு வந்து அதனை ஆராய்ச்சியாளரிடம் காட்டினார். அதற்கு பேராசிரியர், குறிப்பிட்ட நெல் ரகத்தை அந்த விவசாயி வயல் உள்ள பகுதியில் நடவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது 2017-ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு கலெக்டர், காப்பீடு செய்ததற்கான ரசீது உள்ளதா? என்று கேட்டார். அப்போது விவசாயிகள், வேளாண்மை அதிகாரிகள் மொத்தமாக பணம் கட்டுவதால் ரசீது தரவில்லை என்று கூறினர். இவ்வாறு ரசீது கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், “நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வயல்களில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்” என்றார். இதே போல் ஜமீன்சிங்கம்பட்டி, முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்தினார்கள். அதற்கு பதிலளித்த கலெக்டர், இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த ஆண்டு போல் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், “எனக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு 292 தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விட்டன. அதற்கு வனத்துறை ரூ.92,500 தந்ததாக கூறுகிறது, ஆனால் ரூ.57 ஆயிரம் மட்டுமே தந்துள்ளது. அட்டகாசம் செய்த குரங்குளை எனது சொந்த செலவில் பிடித்து சேர்வலாறு வனப்பகுதியில் கொண்டு போய் விட்டேன், அதற்குரிய செலவுத்தொகையையும் வழங்க வேண்டும்” என்றார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
இதேபோல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, நெல்லை மாவட்டத்தில் 232 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அங்கு தரமான விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. அதில் 52 விதை மாதிரிகள் தரமற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி 41.4 டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story