பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தாவிட்டால் சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை - தஞ்சையில், வேல்முருகன் பேட்டி
பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தாவிட்டால் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தஞ்சையில், வேல்முருகன் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கிறோம். அதை ஏற்காத பட்சத்தில் சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
சமஸ்கிருதம் தமிழக மக்களால் பேசப்படாத நிலையில் புரியாத மொழியில் ஏன் குடமுழுக்கை நடத்த வேண்டும?். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால், தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பேசி வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு போன்ற பிரச்சினைகளை திசை திரும்பும் வகையில் அவர் பேசி வருகிறார். அவரை பா.ஜ.க.வினர் பேச வைக்கிறார்கள்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விளைநிலங்களை அழித்து பாலைவனமாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள், பொதுமக்களின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது. இதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உனடியாக திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் போராட்டக்காரர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறிவரும் நிலையில், தமிழகத்திலும் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என மாநிலஅரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story