பொறையாறு அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை - கிராம நிர்வாக அதிகாரியிடம் நண்பர் சரண்
பொறையாறு அருகே மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்த அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொறையாறு,
நாகை மாவட்டம் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மணிமாறன்(வயது 26). கொத்தனார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராகவி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மணிமாறனின் நண்பர் கொட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் விஸ்வநாதன்(21). இவர் பழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி விஸ்வநாதன் பழனியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மணிமாறன் வீட்டில் வைத்து மணிமாறனும், விஸ்வநாதனும் மது அருந்தினர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள குடிசையில் தூங்கினர்.
மறுநாள் அதிகாலை(பொங்கல் தினத்தன்று) ராகவி வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள மரத்தில் மணிமாறன் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த அக்கம ்பக்கத்தினர் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து மணிமாறன் உடலை மீட்டனர்.
பின்னர் மணிமாறன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதி அவரது உடலை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர். அப்போது மணமாறன் பின்னந்தலையில் காயம் இருந்தது.
மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் கீழே விழுந்து அடிப்பட்டு இருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை எரித்தனர். அப்போது அவர்களுடன் இருந்த விஸ்வநாதனும் ஒன்றும் தெரியாதது போல இருந்து விட்டு மீண்டும் பழனிக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் மணிமாறன் சாவில் சந்தேகம் அடைந்த அவரது தாய் அகிலாண்டேஸ்வரி பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அறிந்த விஸ்வநாதன் போலீசார் விசாரணை நடத்தி தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தனது சொந்த ஊருக்கு வந்து எருக்கஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி திலகராஜிடம் சரணடைந்தார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் மணிமாறனை தான் மதுபாட்டிலால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டதாக ஒப்புக்கொண்டார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து அவர் ஏன் மணிமாறனை கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story