குடியரசு தின விழாவை முன்னிட்டு ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


குடியரசு தின விழாவை முன்னிட்டு   ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:45 AM IST (Updated: 25 Jan 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை, 

குடியரசு தின விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடைமைகள் சோதனை

தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் இருக்கும் ‘ஸ்கேனர்’ எந்திரம் மூலமும் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ரெயில்கள், நடைமேடைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரியும் நபர்கள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ‘செக்வே’ எனப்படும் ரோந்து வாகனம் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

அனைத்து ரெயில் நிலையங்களில் இருக்கும் பார்சல் அலுவலகத்திலும், அங்கு வரும் அனைத்து பார்சல்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தண்டவாள பகுதிகளில் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய ரெயில் நிலையங்களின் அனைத்து வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். வருகிற திங்கட்கிழமை காலை வரை பலத்த பாதுகாப்பு தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story