அதிகாரிகளை கொடுமைப்படுத்துவது நீண்டகாலம் நீடிக்காது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்


அதிகாரிகளை கொடுமைப்படுத்துவது நீண்டகாலம் நீடிக்காது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2020 5:00 AM IST (Updated: 25 Jan 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளை கொடுமைப்படுத்துவது நீண்டகாலம் நீடிக்காது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு திறந்த மடல் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

உங்களில் சிலரும், இளைய அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் அடிக்கப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். உங்களை பயனற்றவர்களாக ஆக்குவதற்காகவோ, சமரசம் செய்வது, அல்லது சரிக்கட்டுவது அல்லது சிக்கலை தீர்ப்பதில் உங்கள் முடிவுகளை பலவீனப்படுத்துவது அல்லது உங்களது சொந்த திறமையையும் சந்தேகம் கொள்ள செய்வதற்காக மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது என்பதை மட்டும் அறிந்துகொள்ளுங்கள்.

அனைவருக்காகவும் சிறந்த நிர்வாகம் வழங்க நாம் வந்துள்ளோம். ஒரு சிலருக்காக அல்ல. அதனால்தான் எங்களின் சேவையின் செயல்முறைகள் சீர்திருத்தத்திற்கானதாக இருக்கிறது. ஏற்கனவே மனசாட்சி உள்ள அதிகாரிகளால் பலரது சொந்த நலன்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

மேலும் சிக்கலான சூழ்நிலைகளில் முடிவு எடுப்பது என்பது தொழுவத்தை சுத்தம் செய்வது போன்றது. எப்போதும் ஒரு இனிமையான சூழ்நிலை இல்லை என்பதை நான் அறிவேன். அதுதான் வாழ்க்கை. அது தனிப்பட்ட முறையிலும், தொழிலிலும் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

சிலர் தோல்வி அடையும்போது அவநம்பிக்கை அடைவார்கள். அதை புரிந்துகொள்ளுங்கள்.

தாக்கப்படுவது முதல் முறையாகவோ அல்லது இதுதான் கடைசி முறையாகவோ இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதை கவனித்து கற்றுக்கொள்ளுங்கள். நமது செயல்பாட்டில் நேர்மையாக இருக்கும்வரை நாம் பாதுகாக்கப்படுகிறோம். எனவே விழிப்புடன் இருந்து சமாளியுங்கள். கவனித்து பதில் அளியுங்கள்.

ஆனால் எதிர் வினை ஆற்றாதீர்கள். பணியை செய்வதுடன் நேர்மையாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறோம். புதுச்சேரி நிர்வாகத்தில் நடப்பதை நன்றாக அறிந்து இருக்கிறீர்கள். அரசு அதிகாரிகள் சட்டத்துக்குட்பட்டு பணியாற்றும் வரை அவர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவார்கள்.

எனவே சட்டத்தை பாதுகாப்பதில் எதையும் பலவீனமாக உணரவேண்டாம். கொடுமைப்படுத்துதல் என்பது நீண்டகாலம் நீடிக்காது. மன அழுத்தம் ஏற்படுத்தினாலும் அதுவும் நீண்டகாலம் நீடிக்காது.

தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் அத்தகைய சூழ்நிலைகளை சமாளிப்பதே பயிற்சியாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தற்போது அதிகாரிகள் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் கவர்னர் இந்த பதிவினை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story