ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம் - சேலத்தில் புகழேந்தி பேட்டி
‘‘ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம்’’ என்று சேலத்தில் புகழேந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் பழைய சூரமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் போற்றும் தலைவர்களை தொடர்ந்து தற்போது கட்சியையும், ஆட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்று சிலர் எண்ணினர். ஆனால் முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இது மாபெரும் இயக்கம் ஆகும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது 2 வழக்குகள் தி.மு.க. சார்பில் போடப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் ஒரு வழக்கில் டி.டி.வி. தினகரன் தொடர்பில் இருந்ததால் அந்த வழக்கை தி.மு.க. திடீரென வாபஸ் பெற்றது. இதனால் தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரனுக்கு மறைமுகமாக தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்புவதற்கு சிலர் மறைமுகமாக வேலை செய்து வந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தவுடன் ஜெயலலிதா யாரையும் பார்க்க விரும்பவில்லை.
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு டி.டி.வி. தினகரன் தான் காரணம். இதனை நான் பகிரங்கமாக குற்றச்சாட்டு சொல்கிறேன். எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டேன். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர் தற்போது அடையாளம் இல்லாமல் நிற்கிறார். மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது அவர் நிரபராதியாக தான் இருந்தார். சில காலம் டி.டி.வி. தினகரனோடு இருந்தற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இனிவரும் சட்டமன்ற தேர்தலிலும் அவரால் ஜெயிக்க முடியாது. இவ்வாறு புகழேந்தி கூறினார்.
முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இருக்குமா? இந்த ஆட்சி நீடிக்குமா? என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இந்த ஆட்சி நீடித்திருக்க முடியாது. அவரது நிர்வாக திறமையால் மட்டுமே கட்சியும், ஆட்சியும் வீறுநடை போட்டு வருகிறது. 97 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். ஆனால் முதல்-அமைச்சரின் சாமர்த்தியத்தால் எதுவும் நடக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். டி.டி.வி. தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது, என்றார்.
இந்த கூட்டத்தில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜூ, பகுதி செயலாளர்கள் சண்முகம், யாதவமூர்த்தி, முருகன், சரவணன், பாலு, 24-வது வார்டு செயலாளர் கிருபாகரன் உள்பட கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story