சின்னசேலம் அருகே சம்பவம்: காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை முயற்சி - 2 பேர் கைது


சின்னசேலம் அருகே சம்பவம்: காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை முயற்சி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2020 3:15 AM IST (Updated: 25 Jan 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே காதல் திருமணம் செய்த நர்சு வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சின்னசேலம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூரை சேர்ந்தவர் அலமேலு (வயது 19). இவர் நர்சிங் படிப்பு படித்து விட்டு, உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் அருந்ததியர் தெருவைச்சேர்ந்த சுதாகர் மகன் பிரபு(21) என்பவர் வந்தார். அவருடன் அலமேலுவுக்கு பழக்கம் ஏற்பட்டு, குறுகிய காலத்திலேயே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

ஆனால் இவர்களின் காதலுக்கு பிரபுவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரபு தனது காதலியை எலவனாசூர்கோட்டையில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டாராம். தங்களை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் பிரபு தனது காதல்மனைவியை அழைத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஓணத்தூரில் உள்ள தனது சித்தி கங்காதேவியின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர்களை ஒருநாள் மட்டும் தங்குவதற்கு கங்காதேவி அனுமதித்து விட்டு, இது பற்றி பிரபுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அதன்பேரில் பிரபுவின் தந்தை சுதாகரும், உறவினர் மல்லப்பனும் ஓணத்தூருக்கு வந்தனர். அங்கு அவர்கள் பிரபுவிடம் இருந்து அலமேலுவை பிரித்து அவளது வீட்டுக்கு அனுப்பி விட முடிவு செய்தனர். அதன்படி அலமேலுவை அழைத்துக்கொண்டு சின்னசேலம் நைனார்பாளையத்துக்கு புறப்பட்டனர்.

அப்போது வழியில் அவளிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து கேட்டுள்ளனர். ஆனால் கையெழுத்து போட மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் அவர்கள் அவளை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அலமேலு வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவளை நைனார்பாளையம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு வெளியேறி விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த அவளின் உறவினர்கள் நைனார்பாளையத்துக்கு சென்று, அலமேலுவை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அலமேலு கொடுத்த புகாரின் பேரில் பிரபு, அவரது சித்தி கங்காதேவி, தந்தை சுதாகர், உறவினர் மல்லப்பன் ஆகிய 4 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரையும், மல்லப்பனையும் கைது செய்தனர். பிரபு உள்பட இருவரை தேடி வருகிறார்கள்.

Next Story