அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது தொடர்பாக குழு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசுகையில், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை தாசில்தாரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களின் முழு உடற்தகுதி சான்று மருத்துவத் துறையினரால் வழங்கப்பட்ட பின்னரே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு போதைப் பொருள் ஏதும் தரப்படவில்லை என்று கால்நடைத்துறையினரால் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும், அந்த மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா? என்பதை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் கண்காணித்து பதிவு செய்யப்பட வேண்டும். காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக்கூடாது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டு டாக்டர்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு தனியே குறிப்பிட்ட வண்ணத்தில் சீருடை வழங்கப்பட வேண்டும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் விழாக் குழுவினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஆய்வுக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அரசு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். மேலும் அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பாளர்கள் மீது போலீசார் மூலம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து (எப்.ஐ.ஆர்.) நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story