வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்


வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:30 PM GMT (Updated: 25 Jan 2020 4:09 PM GMT)

வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட தேர்தல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் ஆகியோர் முன்னிைல வகித்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்களிடம் வழங்கினார்.

ஊர்வலம் அண்ணா கலையரங்கம் அருகே இருந்து புறப்பட்டு கோட்டை பூங்கா சாலை, மக்கான் சிக்னல் வழியாக வந்து டவுன் ஹால் அருகே நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, அனைவரும் வாக்களிப்போம், ஓட்டு போட பணமோ, பொருளோ வாங்க வேண்டாம் என்பது உள்பட பல்வேறு தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், தேர்தல் தாசில்தார் ஸ்ரீராம், வேலூர் தாசில்தார் சரவணமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து டவுன் ஹாலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர், மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ரோஜாப்பூ கொடுத்து கவுரப்படுத்தினார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்களாகிய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் ரோஜப்பூ கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கலெக்டர், மாணவர்கள் உள்பட அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Next Story