வரவுக்கு மீறிய செலவு செய்தார்கள்: கூட்டுறவு சங்கங்கள் நலிவடைய தி.மு.க. தான் காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு


வரவுக்கு மீறிய செலவு செய்தார்கள்: கூட்டுறவு சங்கங்கள் நலிவடைய தி.மு.க. தான் காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 4:26 PM GMT)

கூட்டுறவு சங்கங்கள் நலிவடைய காரணம் தி.மு.க. தான் என்றும், அவர்கள் வரவுக்கு மீறிய செலவு செய்தார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு கூட்டுறவு இணையம் தலைவர் சோழவந்தான் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து 50 சுயஉதவிக்குழுக்களுக்கும், சிறிய பால் பண்ணை, டிராக்டர், கறவை மாடு வழங்குதல் என 659 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 60 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் முருகன், இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ராஜமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பினரும் பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கை தரம் உயர அயராது செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் பல்வேறு கடன் மற்றும் சலுகைகள் அளித்து வருகிறது. வங்கிகளை நாடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை நாடி வங்கிகள் என்ற நிலையை உருவாக்கிட 23 மாவட்டங் களில் 123 கூட்டுறவு வங்கி கிளைகள் புதிதாக திறக்கப்பட்டன. கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் உள்ளன. இதற்கு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் தவறை ஏற்படுத்தி விட்டார்கள். வரவு மீறிய செலவு செய்தார்கள். அதனால் நலிவடைந்துவிட்டது. நலிவடைந்த சங்கங்கள் முன்னேறுவதற்காக இதுபோல பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் தொடங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story