திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் அசுர வேகத்தில் வந்த கார், சைக்கிள் மற்றும் மற்றொரு கார் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த கோர விபத்தில் தாய்-மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொடைரோடு,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வசந்தா. தாயார் ஜெயகனி (80). இவர்களது உறவினர் செல்வமைந்தன் (45), அவரது மனைவி ஜெயந்தால்மணி (40). இவர்கள் 5 பேரும் ஒரு காரில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை வெள்ளையன் ஓட்டிச் சென்றார்.
இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரகதீஸ் (26). டாக்டரான இவர் தற்போது மருத்துவ மேல்படிப்பான எம்.எஸ். படித்து வருகிறார். பிரகதீஸ், நேற்று தனது பாட்டி பெரியம்மாளை (70) அழைத்து கொண்டு மதுரை சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கொடைரோடு அருகே சடையாண்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் வழிகளில் 2 பேரின் கார்களும் வந்தன. அதிவேகத்தில் வந்த பிரகதீஸ், முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது சாலையோரமாக சைக்கிளில் கொடைரோடு அருகே உள்ள மாவூத்தன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் சென்றார். இதற்கிடையே அதிவேகமாக வந்த பிரகதீஸ், சைக்கிள் மீது மோதினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தறிகெட்டு ஓடி, நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனை கடந்து மறுபுறம் பாய்ந்ததுடன், எதிரே வந்த வெள்ளையனின் கார் மீது பயங்கரமாக மோதியது. சினிமா படத்தில் வரும் காட்சிகள் போன்று ஒருசில வினாடிகளில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி வெள்ளையன், அவரது தாயார் ஜெயகனி, உறவினர் செல்வமைந்தன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார்கள். இதேபோல் மற்றொரு காரில் வந்த பெரியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பிரகதீஸ், வெள்ளையனின் மனைவி வசந்தா, செல்வமைந்தன் மனைவி ஜெயந்தால்மணி மற்றும் சைக்கிளில் வந்த கிருஷ்ணன் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்காக போராடினர்.
இதற்கிடையே விபத்து குறித்து நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் மற்றும் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த பிரகதீஸ் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்தார். இதனால் விபத்தில் மொத்தம் 5 பேர் பலியாயினர்.
விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் பார்வையிட்டு விசாரித்தார்.
இந்த விபத்து சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் நடந்த கோர விபத்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் அசுர வேகத்தில் வந்த கார், முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்று சைக்கிள் மற்றும் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய சம்பவங்கள் பதிவாகி இருந்தன. நெஞ்சை பதற வைத்த இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story