மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது மண்பானைகள் செய்ய ஆர்வம் காட்டிய வெளிநாட்டு மாணவிகள் கலையை கற்றுக்கொண்டு தங்கள் நாடுகளில் செயல்படுத்த திட்டம்


மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது  மண்பானைகள் செய்ய ஆர்வம் காட்டிய வெளிநாட்டு மாணவிகள்   கலையை கற்றுக்கொண்டு தங்கள் நாடுகளில் செயல்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2020 4:30 AM IST (Updated: 26 Jan 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாணவிகள் மண்பானைகள் செய்யும் கலையை ஆர்வமாக கற்றுக்கொண்டனர். இதை தங்கள் நாடுகளிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை,

பொதுவாக மண்பானைகளில் செய்யப்படும் சமையல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நகர்ப்புறங்களில் கூட மக்கள் தற்போது மண்பானைகளில் சமையல் செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர். மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் மட்டுமின்றி உணவும் ருசிமிக்கதாக இருக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர். ரசாயனம் பூசப்பட்ட சமையல் பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 3 கல்லூரி பேராசிரியர்கள், 4 மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் நம்நாட்டின் மண்பானைகள் செய்யும் தொழில் குறித்து அறிந்து, மண்பானைகள் செய்ய கற்றுக் கொள்ள சுற்றுலா வழிகாட்டி பிரேம் என்பவரிடம் ஆர்வத்தை தெரிவித்தனர்.

மண்பானைகள் செய்தனர்

இதையடுத்து, மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள மண்பானை செய்யும் மண்பாண்ட தொழிலாளியின் வீட்டிற்கு இங்கிலாந்து நாட்டு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். மண்பாண்ட தொழிலாளர் வீட்டிற்கு சென்ற மாணவிகள் மண்பானைகள், சட்டிகள், அலங்கார குவளைகள் ஆகிய மண்பாண்டங்களை சுழலும் சக்கரம் மூலம் களிமண் கொண்டு செய்யப்படுவதை நேரில் பார்த்து ரசித்தனர். பிறகு அந்த வெளிநாட்டு மாணவிகள் தாங்களும் பானைகள் செய்வதற்கு கற்றுக்கொள்ள ஆவமாக உள்ளதாக மண்பாண்ட தொழிலாளியிடம் விருப்பம் தெரிவித்தனர்.

பின்னர் ஒவ்வொரு மாணவியராக அவரது அருகில் அமர்ந்து மண்பிசைந்து குவளைகள், மண்பானைகள் செய்வது குறித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அந்த மண்பாண்ட தொழிலாளி வெளிநாட்டு பெண்களின் கைகளை பிடித்து மண்பானைகள் எப்படி செய்வது? என்பது குறித்து அதன் நுணுக்கங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். ஆர்வமுடன் அப்பெண்கள் களிமண்ணால் மண் பானைகள், குவளைகள் செய்வது குறித்து கற்றுக் கொண்டனர்.

ஆச்சரியமாக பார்த்தோம்

மண்பானைகள் செய்யும்போது சக மாணவிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து வெளிநாட்டு மாணவிகள் கூறியதாவது:- ‘தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் எங்களின் கல்விக்கட்டுரை ஆய்வுக்கு சென்றபோது பலரது வீடுகளில் மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டதை ஆச்சரியமாக பார்த்தோம். அது குறித்து அவர்களிடம் கேட்டபோது, உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்று தெரிவித்தனர். எனவே இந்த கலையை கற்றுக்கொண்டு களிமண்ணால் ஆன மண்பானைகளை தங்கள் நாடுகளில் செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் நாட்டிற்கு செல்லும்போது இங்கிருந்தும் மண்பானைகள், அலங்கார குவளைகள் வாங்கிச்செல்ல உள்ளோம். மீண்டும் மாமல்லபுரம் வரும்போது முழுவதுமாக இத்தொழிலை கற்றுக்கொள்ள உள்ளோம்’ என்றனர்.

தற்போது நம்நாட்டினர் பெரும்பாலானோர் மீண்டும் பழமைக்கு மாறத் தொடங்கி உள்ள நிலையில், அதன் தாக்கம் வெளிநாட்டினரையும் தொற்றிக்கொண்டு அவர்களும் பழங்கால மண்பானைகள் பயன்படுத்தும் ஆர்வத்திற்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

Next Story