‘தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்’ - காஞ்சீபுரம் விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை


‘தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்’ - காஞ்சீபுரம் விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jan 2020 10:30 PM GMT (Updated: 25 Jan 2020 7:34 PM GMT)

காஞ்சீபுரத்தில் குறைந்த விலைக்கு நெல் எடுப்பதை தடுக்க தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாய கூட்டத்தில், கலந்து கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் அறுவடை நேரங்களில் குறைந்த விலைக்கு நெல்களை விலைக்கு எடுப்பதாக தனியார் தரப்பினர் மீது குற்றஞ்சாட்டினர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல்களை பெற்றுக்கொண்டு அதற்கான தொகையை தருவதில்லை என புகார் கூறினர்.

இதைத் தடுப்பதற்காக அறுவடை நேரங்களில் தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அரசு சார்பில் அதிக அளவில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு இடம் பார்த்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.

இதையடுத்து பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இது வரை வழங்கப்படாமல் உள்ளது. மேலும் யூரியா தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதையும், இதனால் விவசாய பயிர்கள் சேதமாவதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர். ஏரிக்கரைகளையும், மதகுகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.

Next Story