சசிகலா விடுதலையானால் அ.தி.மு.க.வில் மாற்றம் வருமா? வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
சசிகலா விடுதலையானால் அ.தி.மு.க.வில் மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாமல் எதையும் சொல்லக்கூடாது. சசிகலா விடுதலையானால் அ.தி.மு.க.வில் மாற்றம் வருமா? என்பதை அவர் வந்த பிறகு பேசுவோம்.
விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வர இடம் கொடுக்கமாட்டோம்.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் கடந்த 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது பெரியகோவில் கும்பாபிஷேகம் எப்படி நடந்தது என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.
2003-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், 2009-ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதும் மத்திய ஆட்சியில் இருந்த தி.மு.க. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது. இப்போது அரசியலுக்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, ரமேஷ், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்கே வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியல் செய்வதற்காக தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. சிறுபான்மையினருக்கு விரோதி போல் அ.தி.மு.க.வை சித்தரிக்க தி.மு.க.வினர் செயல்பட்டு வருகின்றனர். இதை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை. தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பாதுகாவலர்களாக இருந்தனர். அவர்கள் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாதுகாவலராக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் நைனாமுகமது, இசைமுரசு ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜன், முன்னாள் எம்.பி. பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story