பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
சிவகாசி அருகே பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும் என விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
விருதுநகர்,
சிவகாசி அருகே கடந்த 20-ந்தேதி தொழிலாளியின் 8 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்ட மக்கள் இந்த சம்பவத்தால் மிகவும் துயரம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி மீராசங்கர் இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளதோடு சிவகாசி போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எனவே போலீசார் விரிவான விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் தமிழக அரசு வேறு சிறப்பு விசாரணை மூலம் இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் கூறினாலும் அவர்களை சமாதானப்படுத்த முடியாது. தமிழக அரசு கொலையுண்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிடவேண்டும். சிவகாசி பகுதியில் இந்த மாதிரியான சம்பவங்கள் தொடராமல் இருக்க போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story