தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு - மாணவர்கள் வாக்களித்தனர்
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி காளையார்கோவில் அருகே கீழக்கோட்டையில் உள்ள பள்ளியில் மாணவர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காளையார்கோவில்,
தேசிய வாக்காளர் தின விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருவாய்த்துறை சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காரைக்குடி தாசில்தார் பாலாஜி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து தொடங்கி காரைக்குடி கல்லூரி சாலை, செக்காலை சாலை வழியாக வந்து பள்ளியில் நிறைவுபெற்றது. இதில் 1300 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
காளையார்கோவில் அருகே கீழக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வாக்காளர் தின உறுதிமொழி வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வாக்களிப்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியர்களின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல் திருப்புவனத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி சந்தைதிடல், மதுரை மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, கீழரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வாக்களிப்பது நமது உரிமை, 18 வயது நிரம்பியவர்கள் உடனடியாக வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சாதி, மத, மொழி, இன வேறுபாடியின்றி வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story