ஏப்ரல் மாதம் முதல் தியாகிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி


ஏப்ரல் மாதம் முதல் தியாகிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 26 Jan 2020 5:25 AM IST (Updated: 26 Jan 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

தியாகிகளுக்கு அறிவித்தபடி உதவித்தொகை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, இனிப்புகள் வழங்கினார். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகத்தை முடக்கும் வேலையை கவர்னர் கிரண்பெடி செய்து வருகிறார். இங்கு காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மத்தியில் ஆளும் மோடி அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.

நீதிமன்றத்தின் கதவை தட்டி நாங்கள் நீதி கேட்கிறோம். நமக்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. அந்த தீர்ப்பையும் அவமதிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறோம். விரைவில் விடிவுகாலம் பிறக்கும். சனிபெயர்ச்சி முடிந்தவுடன் புதுச்சேரியை பிடித்த சனி விலகும்.

புதுவை மக்கள் நலனை கருத்தில்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க., அதனை திரும்ப பெறுமா?

அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் கடந்த 3½ ஆண்டுகளாக முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை தடையில்லாமல் வழங்கி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1,300 தியாகி களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வருகிற ஏப்ரல் முதல் ரூ.ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறையின் துணை இயக்குனர் குமார் வரவேற்றார். விழாவில் தியாகிகள் மற்றும் அவருடைய குடும்பத்தார் பலர் கலந்துகொண்டனர். முடிவில் இயக்குனர் வினயராஜ் நன்றி கூறினார்.

Next Story