குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி 200 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி முஸ்லிம்கள் பேரணி


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி 200 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி முஸ்லிம்கள் பேரணி
x
தினத்தந்தி 26 Jan 2020 4:00 AM IST (Updated: 26 Jan 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடலூரில் 200 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் 200 அடி நீளமுடைய தேசியக்கொடியை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்த பேரணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட தலைவர் சேட்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜின்னா, காதர்பா‌ஷா, உமர்பாருக், இமாம்ஹூசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் உழவர் சந்தை அருகில் இருந்து தொடங்கிய பேரணி, மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் வரை சென்றது.

இதையடுத்து அங்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் மாநில நிர்வாகி காஞ்சி இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வாகனங்களில் கடலூருக்கு திரண்டு வந்ததால், நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படியும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்க புறப்பட்டு சென்றனர்.

Next Story