சேலத்தில், வாக்காளர்கள் புகார் தெரிவிக்க தொடர்பு மையம் - கலெக்டர் ராமன் தகவல்


சேலத்தில், வாக்காளர்கள் புகார் தெரிவிக்க தொடர்பு மையம் - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 12:24 AM GMT)

சேலத்தில் வாக்காளர்கள் புகார் தெரிவிக்க தொடர்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

சேலம், 

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நேரு கலையரங்கில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பின்னர் கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசியதாவது:-

நமது நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயர்களை கட்டாயம் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும். ஒவ்வொரு தேர்தல்களிலும் நாம் அனைவரும் நமது ஜனநாயக கடமை தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதல் முறையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.

இந்த மையம் ஒரு தகவல் தொடர்பு மையமாக செயல்படும். இது பயிற்சி பெற்ற இரண்டு முகவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால், தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாவட்ட தொடர்பு மையம் இன்று (நேற்று) முதல் செயல்படும். பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் குறித்த தங்கள் சந்தேகங்களை இந்த மையத்தில் கேட்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், உதவி கலெக்டர் மாறன், தாசில்தார்கள் (தேர்தல்) திருமாவளவன், மாதேஸ்வரன், ஆர்த்தி மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச்சங்கத்தினர், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள நேரு கலையரங்கில் முடிவடைந்தது. 

Next Story