கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 22 பேர் காயம்


கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 22 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Jan 2020 3:45 AM IST (Updated: 26 Jan 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயம் அடைந்தனர்.

வையம்பட்டி,

புனித அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில்காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். ஒரு சில காளைகள், தன்னை அடக்க வந்த வீரர்களை காலால் மிதித்தும், கொம்பால் முட்டியும் தள்ளின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், குக்கர், கியாஸ் அடுப்பு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் 22 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மேற்பார்வையில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story