தூத்துக்குடியில் குடியரசு தின விழா கோலாகலம் : கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார்


தூத்துக்குடியில் குடியரசு தின விழா கோலாகலம் : கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 4:15 AM IST (Updated: 27 Jan 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி, 

இந்திய நாட்டின் குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 8-05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக புறாக்கள் மற்றும் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

அதன்பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணியாற்றிய 38 போலீசாருக்கு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 473 பேருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் 61 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 76 லட்சத்து 79 ஆயிரத்து 542 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைத்து பள்ளிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஆல்பர்ட் ஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் விஜயா, தனப்பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story