கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து: முதல்-அமைச்சர் நாராயணசாமி புறக்கணிப்பு


கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து: முதல்-அமைச்சர் நாராயணசாமி புறக்கணிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 5:00 AM IST (Updated: 27 Jan 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிரண்பெடி முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்கினார். இதை புறக்கணித்துவிட்டு முதல்-அமைச்சர் வெளியேறினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் ஸ்வார்டு மற்றும் அரசு செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரியர் மனோஜ் தாஸ், பத்ம ஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தர் ஆகியோரை கவர்னர் கிரண்பெடி கவுரவித்தார். மேலும் அவர், காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தேனீர் விருந்தில் பங்கேற்காமல் விழாவை புறக்கணித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறினர்.

மேலும் காங்கிரஸ், தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் தேனீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

Next Story