அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி அரசு பொது மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் அரசு உறுதியுடன் செயலாற்றி வருகிறது.
புதுவையில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 10 என்ற அளவில் தான் உள்ளது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்று இருப்பதை காட்டிலும் இது குறைவு. வயிற்று போக்கால் ஏற்படும் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டில் மேம்பட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகளோடு புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இதுவரை 186 இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் அளிக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதற்காக புதுவையில் உள்ள 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 81 துணை சுகாதார நிலையங்களை, சுகாதார நல மையங்களாக மேம்படுத்தும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் அனைத்திலும் முழுமையான மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்து தரப்படும்.
ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே புதுவை அரசின் முதன்மை நோக்கம். ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக 33,225 மாணவர்களுக்கு கல்வி, முன்னேற்றம், பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்புகளுக்காக ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.
புதுவையில் குடிநீர் விநியோகம், சீரான சாலை வசதிகள், பாலங்கள் கட்டுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஏரிகள் புனரமைத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ஒருங்கிணைந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தடையற்ற மின்சாரம் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.1,468 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றிகளை நிறுவுதல், பழைய மின்மாற்றிகளை படிப்படியாக மேம்படுத்துதல், மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற மின்மேம்பாட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராம சுவராஜ் அபியான், பிரதம மந்திரியின் சவுபாக்யா திட்டம், தீன் தயாள் உபாத்தியாய் கிராம ஒளி திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் வாய்ப்பை எளிமைப்படுத்தும் வகையில் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான உரிமங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்தாண்டு புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் உதவியோடு சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா போன்ற பல்வேறு கருத்துரு சார்ந்த சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும்.
புதுவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வருகிறது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன. புதுவை மக்களின் நலத்தையும் வளத்தையும் பாதுகாக்கும் வகையில் வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுவை மக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story