திருப்பத்தூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார்


திருப்பத்தூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2020 4:00 AM IST (Updated: 27 Jan 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றிவைத்து, ரூ.7 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உடனிருந்தார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், உயிர்நீத்த வீரர்களின் உறவினர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களை கவுரவித்து, அவர்களுக்கான பராமரிப்பு மானியத்தொகையை கலெக்டர் வழங்கினார். அதன் பிறகு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட 15 துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், விவசாய உபகரணங்கள், சலவைபெட்டி, தையல் எந்திரம் என 426 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே ஒரு லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.

அதன்பிறகு நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காவல்துறையினரின் சாகசங்கள் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விதைப்பந்து வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தமிழகத்தில் முதலிடம் பெற்றதற்காக சரக துணை பதிவாளர் முனிராஜூ, துணை பதிவாளர் மு.வசந்தலட்சுமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் மு.மு.சுப்பிரமணியம், பாலசுப்பிரமணி, கந்தன், தர்மேந்திரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story