பழங்குடியினர் 31 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை - கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
பழங்குடியினர் 31 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
காட்பாடி,
காட்பாடியை அடுத்த பழைய தொண்டான்துளசி ஊராட்சியில் குடியரசுதின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமைதாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குடியரசு என்பது மக்களிடமிருந்து ஆட்சி உருவாக்கப்படுவதாகும். அரசியல் சட்டமென்பது அனைவருக்கும் சமமான உரிமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவேண்டும் என்பதாகும். அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவே இதுபோன்ற கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அதற்குரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி, செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமமக்கள் விருப்பு, வெறுப்பின்றி கிராமத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடும்போது கிராமம் சிறந்த கிராமமாக உருவாகும். தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது. கிராமமக்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கி்ராமத்தின் அழகையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கி உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழங்குடியினர் 31 பேருக்கு கல்லாங்குத்தில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே பட்டாவாங்கி வீடுகட்டியிருந்தால் பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழைய அங்கன்வாடி மையம் பழுதடைந்துள்ளதால், அதனை இடித்து புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் கிராமமக்களிடம் தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டு வருவது குறித்தும், குடிமராமத்து பணிகள் குறித்தும், கூடுதலாக நூலகம் அமைப்பது தொடர்பாகவும், கர்ப்பிணிகளுக்கு பணம் சரியாக வருகிறதா என்றும், 100 நாள் வேலைதிட்டம் தொடர்பாகவும், பசுமை வீடு கட்டித்தருவது குறித்தும் கேட்டறிந்தார்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.50 ஆயிரம், 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்வீதம் தனிநபர் நலிவுற்றோர் கடன் உதவியும், 7 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் உதவியையும் வழங்கினார்.
கூட்டத்தில் ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாரதாருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வி, கே.வி.குப்பம் தாசில்தார் சுஜாதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story