தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலவரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலவரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 9:12 PM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலவரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. விருது நகர் மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, தலைமை கழக பேச்சாளர்கள் குரல்பித்தன், சின்னையா கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் காலம்வரை தமிழுக்காக அ.தி. மு.க.தான் குரல் கொடுத்து வருகிறது.

தி.மு.க. தமிழை விற்று பிழைக்கிறது. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் தமிழை பற்றி பொதுமேடைகளில் பெருமையாக பேசுவார்கள். தி.மு.க.வில் தற்போதுள்ள தலைவர்களில் யாரும் மொழிப்போர் தியாகிகள் கிடையாது. அத்தனை பேரும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். ஏனென்று சொன்னால் தமிழை பற்றி பேசுபவர்களை அவர்கள் கூடவே வைத்திருக்க மாட்டார்கள். தமிழை விற்று பேசுபவர்களை அழைத்துக் கொள்வார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தமிழ் என்று சொன்னாலே பிடிக்காது. தமிழுக்காக ஒன்றும் செய்யமாட்டார்.

தமிழர்களுக்கு உழைப்பது போல தி.மு.க.வினர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சமுதாயம், கிருஸ்தவ சமுதாயத்தை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். ஒவ்வொரு மதத்தையும் தூண்டிவிடுகிறார். இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க. தான். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிள்ளையார்சுழி போட்டது தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலவரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இங்கு பிரிவினைக்கு இடமே கிடையாது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் அனைத்து சமுதாயமும் ஒன்றிணைந்து இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சக்தி கோதண்டம், சேதுராமானுஜம், நகர செயலாளர்கள் அசன்பதுருதீன், பொன்சக்திவேல் சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கணேசன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி சசிகுமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜயானந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், திருத்தங்கல் நகர மாணவர் அணிச் செயலாளர் ஹரிஹரசுதன் என்ற மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நல்லதம்பி செய்திருந்தார்.

Next Story